திங்கள், 7 ஆகஸ்ட், 2017

எனக்கு இக் கதைகளில் ஒரு குறையுண்டு

-ஹஸீன்-

  ("கதவு திறந்துள்ளது"
23.09.2016இல் அக்கரைப்பற்றில் நிகழ்ந்த மூன்று நூல்கள் பற்றிய உரையாடல். ஏழு கடல்கன்னிகள் பற்றி தோழர் ஹஸீன் முன்வைத்தவை.)


தமயந்தியின் கதையில் என்னை வசீகரித்தது அவருடைய மொழிதான்.
அவருடய மொழி முபாறக் அலி நானாவின் சேவலின் தொண்டை போல திறந்தது. அவருடைய வாழ்வுதான் அவர் மொழி. அவருடைய வாழ்வு அவருடைய உறவுகள். தமயந்தியின் உலகம் அப்புவும் குழந்தைகளும்.
அவர் புலம் பெயர்ந்து சேர்ந்த நாடும் மீனவ தேசம்.









அங்கு அயலவர்களும் மீன்பிடிபவர்கள். எவ்வளவு துயர் தோய்ந்த கதையிலும் அவர் மீன்வேட்டையில் காலம் இடம் மறந்து வாழ்கிறார். அவருடைய நோர்வே பிரீஜ்ஜில் கரு வேப்பிலை இருக்கிறது. அவர்ளுடைய சட்டியில் ஆச்சி வைத்த பக்குவத்தில் புளியாணம் இருக்கிறது. ஆச்சி வைத்த பக்குவத்தில் மீன் குளம்பு வைக்க தெரிந்த பிள்ளைகளுக்குத்தான் ஏழாற்று கன்னி போன்ற கதைகளை எழுத முடியும். கீழைத்தேய கதைகள் என்ற தாெகுப்பில் காணப்படும் கதைகளைப்போல அற்புதமான கதை. 
நமது பெண்கள் எப்படி தொன்மங்களாகிறார்கள் எனும் கதை.தமயந்தியின் கதைகள் ஒன்றோடு ஒண்று கலந்திடும் கதைகள்.ஒரு சுய வரைபடம்.பழங்குடி தொழிலான செம்படவன் எனும் திமிறும் அன்பும் நிறைந்த மனிதனின் வரைபடம். 


அவனுக்கு நாச்சிக்குடா தீவு முழுவதும் கால்கள்.உலகம் முழுவதும் சிறகுகள்.அவனுக்கு சிறகுகள் வழங்கிய அப்புவை பற்றி சொல்லும் போது மாலை வெள்ளி,கப்பல் வெள்ளி,மூவிரு ராசாக்கள் வெள்ளி,ஆறாம் மீன் கூட்டம்,செட்டியை கொன்ற வெள்ளி, விடி வெள்ளி என வெள்ளிகளின் பெயர்களை சொல்லி தந்தது அப்புதான் என்கிறார்.  

அல்போன்சா நல்ல வடிவான கறுப்பி.அவள் எப்படிப்பட்ட போரில் வயதுக்கு மூத்த கிழவியானாள் என்று சொல்கிறார்.'இந்த உத்தரிப்பு ஸ்தலத்துக்குள் எப்படி மேய்த்து வரப்பட்டார்கள் என்ற சூட்சுமத்தைக்கூட இந்த நொடிவரை அறிந்திலர்.யாழ்ப்பாண வெளியேற்றத்தில் இருந்தே இவர்களுக்கு இது புரியாத புதிர் மட்டுமல்ல இவர்களின் வாழ்வுக்கும் தொழிலுக்கும் எந்தக்காலத்திலும் சம்பந்தம் இல்லாத நிலமும் தான். சிங்கமும் புலியும் இவர்களுக்கான வாழ்வை வைத்திருக்கிறார்களோ இல்லையோ, ஆனால் உப்புச் சோழகத்தில் கறுப்பும் சிவப்புமாய் கொப்பு மொய்த்து கிடக்கும் ஈச்சம் பழங்களைப்போல் மடி நிறைய மரணங்களை வைத்திருந்து நேர காலமின்றி அள்ளி அள்ளி வழங்குகின்றார்கள்.'போர் நிலக்காட்சி பால்யகாலத்தையும் எப்படி பின்னோக்கியும் கொல்லும் என்பதை நாம் காணலாம். 
எனக்கு இக் கதைகளில் ஒரு குறையுண்டு கதைகள் வாசகனை பற்றிப்பிடிக்க செய்ய வேண்டி வடிவரீதியான பிரயத்தனங்களை செய்யவில்லை என்பதுதான். அது இயல்பானது போல் செய்யவேண்டியதுதான்.
தமயந்திக்கு கதை வாலயப்பட்டிருக்கிறது. அவர் இன்னும் நிறைய எழுத வேண்டும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக