திங்கள், 7 ஆகஸ்ட், 2017

கொல்வதும் வெல்வதும் மட்டுமல்ல வீரம், காப்பதும் வீரம்தான். மாவீரம் -அனலை சிவம்-


நூல் விமர்சனம் - 09.10.2016இல் கனடாவில் நிகழ்ந்த "ஏழு கடல்கன்னிகள்" புத்தக விமர்சனத்தில் சிவம்.
கடையால். திருந்தாதி. ஆணம். விக்கினம். புருவத்தோரி. வாரி. விடந்தை. சுக்கானி.  திறவு. நுகைப்பு. வங்கு. கவிர். வெப்பல்.  வடு.  தாவீது. கவண். குட்டூறு. தலைச்சன்.  தண்டையல். நிட்டூரம். தங்கு தாணையம்.  சக்கிடுத்தார். பாய்ச்சுக் கம்பு. மண்டாடியார்.  கடிப்புத்தூர்.
பேக்கிலவாண்டி. பரபாசு. தொடுவத்தோணி. நாவட்டப்பாறை. வட்டக்கல் பாறை. சாட்டாமாற்றுச் செடிகள். தாமரைக் காத்தான்கள். வெள்ளாப்பு. பாடு. மைம்மல்(மம்மல்) கிணாய்ச்சுக்கொண்டு (கிணாய்த்து) முள்ளிக்கொடி.  இசங்குச்செடி.  கிளாச்சி.  கண்ணா. குண்டுமணி.  வீளி. வீச்சுளாத்தி. புங்கைமரம். மாலைவெள்ளி. கப்பல்வெள்ளி. மூவிராசாக்கள்வெள்ளி. ஆறாம் மீன்கூட்டம். செட்டியைக்கொன்ற வெள்ளி. விடிவெள்ளி.
 ஒரு வெளியீடு யுத்தம் கடலில் தின்று துப்பிய உயிர்களின் விசாரணையையும், கடல் வளப் பாதுகாப்பிற்கான தேவையான நடவடிக்கைகளை கோரியும் வாசகர் முன் வைக்கப்படுவது தமிழ்ப் பரப்பில் எனக்குப் புதியது. அவசியமானது. சிலரது மூளையைக் கசக்கக்கூடியது. ஒரு சமூகப் பயனை வேண்டிநிற்பது.
எழுத்து கரைகளின் இரைச்சல் நிறைந்த காற்றுவெளியில் காணாமலேயே போகின்ற வட்டார வாழ்வியல் சொற்களைத் திருப்பி உயிர்கொடுக்கிற முயற்சியில் ஆடம்பரமில்லாதபடி நகர்வதும் கசப்பான உண்மைகளை யாரும் கட்சிகட்டி கம்பெடுக்கவிடாமல் வலிகளை ஆவணப்படுத்துவதும் வாசிக்கத் தூண்டுபவையாகவுள்ளன.
வாழ்வை வாழக் கற்றுக்கொடுப்பதும் மனித நெறிகளை நிறைய இடங்களில் வாழ்ந்த வாழ்வின்மூலம் ஒரு உலகக் கிராமத்திற்குள் வாடி கட்டி வாழக்கற்றுக்கொடுப்பதும்  மிகவம் இயல்பாக எந்தவிதமான பிரச்சார வெடில் ஏதுமில்லாமல்  சமைத்துப் பரிமாறுவதும் வாசிப்பை உணர்ந்து உள்வாங்குதலை அப்புவின் மணலில் தாட்டுச்சுட்ட மீனைப்போல ருசியாகவே எழுத்து ஊட்டிவிடுகிறது.
மெலிஞ்சிமுனையிலிருந்து ஒரு கட்டுமரம் ஏழாற்றுப் பிரிவுகளனைத்தையும் குறுக்குவெட்டுமுகமாக கிழறி நீர் பிரிச்சு ஆழம்காட்டி பாறைகள் காட்டி பாறைக்குள்ளும் ஈரம் தோய்த்து  உயிர்கள் காட்டி வட்டாரஸ் சொற்களைக்கொண்டு சேறு உழக்கி மிதி படாத இடங்களிலிருந்தெல்லாம் மட்டி பொறுக்கி மிதிச்ச இடங்களில் கடலும் அலையும்கூட அழிக்முடியாதபடி தடங்கள் பதிச்சு ஒரு எழுதுகோல் ஏங்கிக்கிடந்த நீண்ட மணற்பரப்புகளில் பறி இறக்கி வைத்திருக்கிறது. அவரவர் பசிக்கு மீன் கிடைக்கிறது என்பதற்கு உத்தரவாதமுண்டு.
கடல் வளங்களை மட்டுமல்லாது கடல்நிலத்தை உழுது உயிரிகளின் எல்லாவிதமான இயற்கையான சுழற்சிமுறை வளர்ச்சிகளனைத்தையும் மல்லாக்கப்போட்டு அதுக்குமேல சாப்பாட்டுக்கோப்பையை வைச்சு அடுத்த சந்ததிக்கு நங்கூரத்தில ஒட்டியிருக்கிற துண்டுப்பாசியைக்கூட பரிமாறமுடியாமற் செய்கிற நமது கடற்கரையில் நிகழுகிற எல்லா அரசியல்வாதிகளும் ஊடகத்துறையும் பேச மறுக்கிற ஒதுக்குகிற மறைக்க நினைக்கிற ஒரு கடற்கொள்ளையை நிறுத்தக்கோரும் குரலின் அடையாள வெளிப்பாடாக இந்தப் பிரதி படைப்பாளரினால் முன்வைக்க்பபட்டிருப்பது சமகாலத் தேவைகளுக்குள்ளே எழுத்து மையங் கொள்வதன் மூலம் தமிழ்வெளியில் புதுமைப்படுகிறது என்றே கொள்ளலாம்.
இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் நினைவுக்கோபுரமும் விசாரணைக்கோரலும்
மீனவர்களின் புரிதலுக்கும் வியாபாரிகளின் இலாபத் திமிர்த்தலுக்குமான இடைவெளிக்குள் உடையவேண்டிய பாறைக்குள்ளும் புதிய அணுகுமுறையை முட்டையிட்டுப்போகிறது.
இது ஒரு கையடக்கமாக அரசியல், சமூகம், வாழ்வியல், வட்டாரவழக்கு, பசி,பட்டினி, ஒற்றுமை, கொட்டில் கால்களைக்கூட பிடுங்கி எறிந்தபோதும் அதை உப்புக் கரிப்புக்குள் பதியமிட்டு முளைக்கவைத்து குருத்தும் கூத்தும் கண்ட சமூகத் தண்டையல்களின் எழுச்சி
நாளாந்தச் சூறைகளுக்கிடையிலும் நிமிர்ந்தே நிற்கத்தெரிந்த கூரைகளின் நிழற்கசிவு  வெளிச்சத்தையும் வெட்கையயும் பிரிகை செய்யத்தெரிந்த மண் திண்ணைகளின் ஸ்பரிசம். 
உப்புத்தண்ணியின் அலசல்களில் உடையாமலே நெருப்பிலேயே வெந்துகொதிக்கும் மண்சட்டிகளின் மணம்.
மித்தித்து மிதித்து அழுத்தியதாலான  மணற்பரப்பின் கொதிப்பு. 
நங்கூரமிட்ட படகொன்றின் மெல்லிய அசைவுகளுடனானதும் நிலைப்பு நிதானத்துடனுமான ஒருமைப்பாடான மானுடத்திற்கான கோரல்கள்.
சமரசமில்லாமல் அலைகளைக் கிழிக்கும் அணியத்தின் பலத்துடனான எழுத்தின் வேகம். இத்தனையையும் உடுத்திருப்பவர்கள்தான் இந்த "ஏழு கடல்கன்னிகள்".
கடலுக்குள்ள இருக்கிற நந்தவனத்தையும் அதை ஆழுகிற மக்களின் வேதனையையும் வாசகனின் மனதுக்குள் நட்டுவிடுகிற எழுத்து இது.
"கொல்வதும் வெல்வதும் மட்டுமல்ல வீரம், காப்பதும் வீரம்தான். மாவீரம்."
என்ற வரிகள் ஏன் கப்பல் தரைதட்டியது? என்ற கேள்விக்கான சில புரிதல்களை வேண்டிநிற்கிறது.
கொல்வதில் இருந்த வீரம் காப்பதில் நம்மிடம் இல்லை என்பதை இன்றைய முன்னாள் போராளிகிளின் அவலத்திலும் வன்னியின் செந்நாரையில்லாத வயல்வெளிகளைப் பாரத்தும் தெளிவுகொள்ளலாம்.
முபாரக் அலிநானாவின் சேவல் கூவித்தான் யாகப்பர் ஆலயத்து சக்கிடுத்தாரை துயிலெழுப்புகிற  ஒற்றுமையான வாழ்வு இருந்திருக்கிறதையும் அப்படித்தான் இருக்கவேண்டுமென்பதையும் ஒரு பறவையின் குரலினூடாக  இந்தப்போனா  கூவிச்செல்கிறது. சொல்கிறது.
இயக்கப் பொறுப்பாளனோ "இனிமேல் தமிழர ஆத்திரப்படுத்தாம நடந்துகொள்ளுங்கோ" என்று குற்றவாளிகளைப் பிடித்துவந்து ஒப்படைத்தவர்களுக்கு அறிவுறுத்தியதோடு "குற்றவாளிகளையும் விடுவித்தான்" ."தமிழர ஆத்திரப் படுத்தாதேங்கோ எண்டால், அப்ப நாங்கள் யாரு?" என்றொரு குரல் கூட்டத்தார் மத்தியிலிருந்து..
இப்படி ஒரு சூழ் வாள் அடியை மிகஸ் சாதாரணமா வெளுத்துவிட்டுப் போவதும் வாசகனை தேவையானதை பொறுக்கிக்கொள் என்பதும் ஒரு அவசியமான மொழியா மதமா அடையாளம்? யார் எதை ஏற்றுக் கொள்கிறார்கள்? யார் எதை ஏற்க வேண்டுமென்று வாதாடுகிறார்கள்? என்ற பெருங்கேள்விகளை சத்தமில்லாமல் சுடுமணலில் கிளறிவிட்டுப் போவதும் இன்றைய பேசுபொருளாக வேண்டியுள்ளன. "குற்றவாளியை விடுவித்தான்" என்பது இயக்கங்களின் நீதித்துறையின் குறுக்குவெட்டு முகம்தான். அப்ப நாங்கள் யாரு.? என்பது வாசகனே மக்களே நீங்கள் தேடவேண்டியவர்கள் என்பதாகும்.
வீசிய வேகத்தில் சூரியனை விலத்தி வெளிச்சம் மட்டுமே பிடித்துக்கொண்டு வீடு திரும்பகிறது ஒரு வீச்சுவலை.
இந்தப் படைப்பு ஒரு அரசியல் அலை.
யுத்தம், அகதிவாழ்வு, நாஸிசம், கடல் வளங்களின் கேள்விக்குறியான எதிர்காலம், இன ஒற்றுமை, யுத்த வலி, வேதனை, படிப்பினைகள், மனிதர்களுக்கிடையேயான ஆரத்தழுவல்கள், குடும்ப நட்புகள், மத போதை, மதத் திமிர், மத வியாபாரம், தீவக மக்களின் குடிநீர் தவிப்புடனான எதிர்காலம் பற்றிய தொண்டை வத்திய கொதிப்பு, பன்னாட்டு நிறுவனங்களின் கடன் வலைவிரிப்பும் இறால் போட்டுச் சுறா பிடிக்கிற  சூழ்ச்சிபற்றி குகுமுறலும்..
இப்படி எல்லாவற்றையும் நமது மொழி வழக்கிற்குள் சிறங்கையளவும் சோர்வுதராமல் கவிதையைப்போலவும் கதையைப்போலவும் ஒரு நாவலைப்போலவும் வெறும் 118 பக்கங்களுக்குள் களங்கண்டி கட்டி மனதைப் பிடிப்பது எழுத்தாளனுக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. சத்தியப்பட்டிருக்கிறது.
இந்தப் படைப்பு எவையெல்லாம் மானுடத்திற்கு வலுவற்றதாக உள்ளனவோ அவற்றை விமர்சிப்பதன் மூலம் எவையெல்லாம் மானுடத்தை வாழவைக்குமோ அவையாகவே வாழ்ந்து காட்டுகிறது.
அழுக்காய் இருப்பவன் சிரிப்போடிருக்கிறான். சிரிக்காமலிருக்கிறவன் அழுக்காயிருக்கிறான். இதைச்சொல்லும் “கிற்றார் பாடகன்” மானுடத்தோடிருக்கிறான்.
"இயற்கையை மட்டுமல்ல மனிதர்களின் வாழ்வையும் உன் கமெராவால் பார்" என்று கிற்றார் நண்பன் சொல்வதன் மூலம் தனக்கான சுயவிமர்கனத்தை  எழுத்தாளர் செய்துகொள்வதும் எங்குபோனாலும் எப்படி வாழ்ந்தாலும் பெயர் அகதி தானென்பதும் மேற்குலக இனவெறிக்குள்ளும் அதை எதிர்க்கும் மறுக்கும் புரிதலுள்ள மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதையும் எந்தக் குற்றஸ் செயல்களுக்கும் மொத்தமாக ஒரு சமூகத்தை எந்தவிதத்திலும் அடையாளப் படுத்த முடியாது என்பதையும் வாழ்வின் நீரோட்டத் திசையில் படகோட்டும் பாய்மரக்கப்பலின் தண்டையலின் பாகத்தோடு கதை சொல்வது. வாசிக்கத்தூண்டுகிறது.
வீதிகளில் இரக்கும் இருக்கும் மனிதர்களை புலம்பெயர் தமிழ்ச்சமூகம் வெறும் அழுக்காகவே பார்க்கிற போக்கிற்கு கிற்றார் பாடகன் பாத்திரத்தின்மூலம் சுத்தமான மனிதத்தைப் பேசவைத்திருப்பதின் வாயிலாக ஒரு வெளிச்சக்கூட்டைக் காட்டிவிடகிறது இந்தப்புத்தகம்.
இந்தப் படைப்பின் காத்திரம் எந்த இடத்திலும் புத்திசொல்லும் மேதாவித்தனத்தைத் திரும்பியும் பார்க்காமல் கரைசேர்ந்திருப்பதினாலும் வலுமைபெற்றிருக்கிறது.
கலவாய் மீனை பாறைக்குள்ளேயே வைத்து  குத்திய காயமும் தெரியாமல் உயிரோடு பிடிக்கிறமாதிரியே கதைகள் நிறைய விடயங்களை பல இடங்களில் மனதில் சாக்கிலிருந்து அவிழ்த்துக்கொட்டிய தேறகை மீனைப்போல கொட்டிச் செல்கிறது. அழிந்தேபோன தேறகை மீனைப்போல இப்படி வாசிப்பது அருமைதான்.
அப்பு.
86ல் முபாரக் அலிநானாவின் நைலோன் போட்டில இந்தியாவுக்கு போவது சாத்தியமும் சத்தியமுமென்றால் நாம் நான்கு வருடங்கள் கழித்து ஒக்டோபர் 26ம் திகதி 90ம் ஆண்டு பிறை நிலவைப்பிடுங்கி ஒரு சாரத்துக்குள்ள மடிச்சு 10 ரூபா நோட்டை கண்ணீரில் கசங்கிப்போன இரவுக்குள்ள சுருட்டிவைச்சு துரத்தியதை இன்னும் உணர மறுப்பது கொடுமை.
இந்தப் படைப்பில் அப்புவும் முபாரக் அலிநானாவும் வாழும் ஆரத்தழுவல்கள் இனவாதிகளால் சிதைக்கப்பட்ட அன்னியோன்னியமான பழயை வாழ்வைப் புதுப்பித்துக்காட்டி வாழத் தூண்டுகிறது. கால்நூற்றாண்டின் பின்பாவது இதுபோன்ற வெளியீடுகள் முபாரக் அலிநானாவின் பேரப்பிள்ளைகளின் கண்களைப் பார்த்துப் பேசட்டும்.
சிறிமா காலத்து தேத்தண்ணி குடிக்க பேரிச்சம்பழுமும் தோடம்பள இனிப்பும் உதவின என்ற பதிவின்மூலம் அன்றைய ஞாபகங்களை பாணிவடிய மனதோடு ஒட்டி வைக்கிறது.
நியாயமான அரசிலைப்பேசினால்  தலையில அடிபட்டிருக்கு என்று சொல்கிற தமிழ் அரசியலை நையாண்டிபண்ணும் விதம் அலாதியானது.
"கூட்டணிக்காரர் குடிதண்ணிக்கே சனத்தைத் தவிக்கவிட்டவங்கள்" ன்ற வரிகளின் மூலம் அப்பவும் தவிக்கவிட்டதுதான் நடப்பா? என்று கேள்வியேதும் கேட்கத்தோன்றவில்லை.
போர் நிலத்தில் களத்தில் களப் படப்பபிடிப்பாளர்கள் எந்தப் பலத்தின் பின்னணியில் நின்று நிதானமாகப் படம்பிடிக்கிறார்கள் என்ற கேள்வி புத்தியில் கந்தகம் பூசுகிறது.
கடலில் வழியனுப்பும்போது கண்ணீர் விடக்கூடாது என்ற வாழ்வியல் மரபை  இங்கு சொல்வதன்மூலம் கடற்தொழில் எந்த உத்தரவாதமுமற்ற உயிர்காவி வாழ்க்கை என்பதை ஆழமாகச் சொல்கிறது படைப்பு.
எட்டாம் பிரசங்கம்.
விரியன் பாம்புகளின் கொட்டாவி மணம், அமைதியை விதைக்கவந்தவர்கள் விதைத்துவிட்டுப்போன நச்சுக்கொடி, செடி, மரங்களின் பயமுறுத்தல்கள் எதையோ “றாவா” சொல்லுற மாதிரியும் கொள்ளலாம்..
மரங்களையும் சொல்லி இன்று நஞ்சாக இருக்கும் மனிதர்களையும் அடையாளம்காட்டும் எழுத்து வலியது.
கறப்பு நாடாவில் சொருகிய  மந்திரக்கோல் துறவிகள் பூமியை "அழுத்தமாக மிதித்தபடி திரிந்தார்கள்" என்ற மண்டா வசனத்தினால் வத்திக்கான் திருமுடியில ஏறி ஒரு மிதி மிதித்திருக்கிறதும்  சக்கிடுத்தார் அடிக்கிற கோவில்
மணிதான்.
இப்ப நடக்கிற உலகமயமாதல் என்ற "உலகுமாயமாதல்" நிகழ்ச்சி நிரலில் நாட்டைச்சுற்றி கடலிருக்கிற இலங்கையில எப்படி உலவைச்சுப் பொங்குவார்கள் என்பதை உணர்ந்து அப்பு அலிநானா சோமபால பாத்திரங்கள் பன்முகத் தன்மையின் கடற்கரைத் தென்றல்போன்ற ஈரலிப்போடு தொடுவத்தோணியில் பயணிக்கின்றன.
"மீள வேண்டும்" என்ற கவிதை ஒரு அகதிவாழ்வின் ஏக்கம் நிறைந்த  தவணைமுறைச் சாவு பற்றியதாகவுள்ளது.
பொங்குதமிழ், எழுக தமிழ் சொல்வதை இந்தத்தமிழ் சொல்ல விரும்பவேயில்லை.
இன மத மொழிகளைக் கடந்து உலகம்பூராவும் உன் தேவைகளைத்தேடுகிறாய்.
இன மத மொழிகளுக்குள் வாழ்வை ஏன் தொலைத்துவிடுகிறாய்?
இந்தப் படைப்பு முன்வைக்கும் நியாயமான கேள்வி இதுதான்.
இந்தக் கேள்விகளைக் கேட்கிறவர்கள் கொண்டாடவேண்டிய படைப்பு இது.
கதைகளில் அம்மா அக்கா தங்கை காதலி என இவர்களையும் உள்நுளைக்காத தவறை உணர்ந்தேயாகவேண்டும்.
அப்புவும்  முபாரக் அலிநானாவும்  தங்காலை சோமபாலவைத் தழுவிக்கொள்ளாததும், குடும்பமாகச் சந்தித்துக் கொள்ளாததும்  எழுத்தைப் பலவீனப் படுத்தாவிடினும் முழுமைக்குப் பலம் சேர்க்கத் தடையாக அமைந்துவிட்டது என்பது மட்டும்தான் என் மனதிற்கு குறை.
தட்டிக்கொடுக்வேண்டிய படைப்பாளி தமயந் தீ.
-சிவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக