திங்கள், 7 ஆகஸ்ட், 2017

ஏழு கடல்கன்னிகள் மீதான எனது வாசிப்பு -மிஹாத்-

("கதவு திறந்துள்ளது"  23.09.2016இல் அக்கரைப்பற்றில் நிகழ்ந்த மூன்று நூல்கள் பற்றிய உரையாடல். ஏழு கடல்கன்னிகள் பற்றி தோழர் மிஹாத் முன்வைத்தவை.)


Fiction is not imagination. It is what anticipates imagination by giving it the form of reality.
Jean Baudrillard _



தமயந்தியை தொண்ணூறுகளின் மத்திய காலத்திலிருந்து எழுத்துகள் வழியாக அறிந்திருக்கிறேன். அவர் தமிழ் போராட்ட இயக்கங்களோடு ஒரு காலத்தில் சம்பந்தப்பட்டிருக்கக் கூடும் என்பதையும் அனுமானித்திருந்தேன்.
எனக்கு பிரதிகளின் மீதான பார்வையை மேற்கொள்வதில்தான் பிரியம் அதிகம் என்பதனால் தமயந்தியை மறந்து விடவே விரும்புகிறேன்.
ஏழு கடல்கன்னிகள் என்னும் ஏழு கதைகளின் தொகுதியானது வாசிப்பின் போது எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகளையும் அபிப்பிராய மாற்றங்களையும் எனது புரிதல்கள்வழியே தெரிவிப்பது மட்டுமே எனது விருப்பம்.
உலக இலக்கியச் சூழலின் பிந்திய காலப் போக்குகளை ஒரு அளவீடாகக் கொண்டு ஒப்பீட்டு அடிப்படையில் இந்தக் கதைகளை நான் நோக்க விரும்பவில்லை.

ஏனெனில் புனைவு வேலைகளின் technical சமாச்சாரங்களுடன் இந்தக் கதைகளை உரசிப்பார்த்து அதற்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயல்பான எளிய கதைசொல்லும் பணியை வருந்தச் செய்ய மனசு விடவில்லை.

இதில் நமது அபிலாசைகளுக்கு நெருக்கமாகி நமது அரசியல் உணர்வை உசுப்பேற்றி விடும் கதைத்திட்டங்கள் உள்ளன.

இதை என்னை உறுத்தி உறவு கொள்ளக் கூடிய ஒரு பிரதியாக ஏற்று அதற்குள் உருப்பெறுகின்ற அனுபவங்களைச் சிதைத்து விளையாடுவதற்கு இன்றைய நிகழ்வை பயன்படுத்த விரும்புகிறேன்.

இந்தப் பிரதியை எவ்வாறு வாசிக்கலாம் என்ற எனது திட்டத்திற்கும் வாசகனுக்கு எதிராக இந்தப் பிரதிக்குள் இயங்கும் கதைசொல்லல் ஏற்பாட்டிற்கும் இடையில் அந்த விளையாட்டை நிகழ்த்துவதுதான் பொருத்தம் என்றும் கருதுகிறேன்.

இது ஏழு கதைகள் கொண்ட தொகுதி. ஒவ்வொரு கதையும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிலச் சூழலை கதையின் தளமாகக் கொண்டு இயங்குகிறது. ஒரு சம்பவத்தை காட்சியாக விரித்து வைத்து விட்டு வாசகனை வேறொரு நினைவுச் சுழல் வழியாக அழைத்துச் செல்லும் உத்திகளால் கதைகள் தனது பாதையை வடிவமைக்கிறது.
புலம்பெயர்ந்து வாழும் சூழலில் ஆரம்பிக்கும் காட்சிகள் தாயக நிலப்பரப்பில் கரைந்து அழிவதும்;
தாயகத்தில் ஆரம்பிக்கும் காட்சிகள் புலம்பெயர்ந்து மேற்கில் மறைவதுமான கதை ஒழுங்கு ஒன்றில் புனைவுத் தந்திரங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.

பெரும்பாலும் இந்தக் கதைகளின் வசன அடுக்குகளுக்குள் மானுட நேயத்தின் சிதறல்கள் கதையின் போக்கை திசை திருப்பி விடாதபடி சிக்க வைக்கப்பட்டிருக்கின்றன.

தற்கால வாழ்விற்குள் ஒன்றித்து இழையோட முடியாமல் விலகல் தன்மையுடன் பழைய வாழ்க்கை மீதான ஏக்கங்களையும் போர் சிதைத்துப் போட்ட மனிதர்களையும் பின்தொடர்வதே இந்தக் கதைகளின் முக்கிய பணியாக இருக்கிறது.

கடந்த காலத்தின் மீது ஈரமாக பிணைந்து கிடக்கும் பரிவு இந்தக் கதைகளின் ஆன்மாவை பதப்படுத்திப் பாதுகாக்கிறது.
எழுபது மற்றும் தொண்ணூறு ஆகிய மூன்று தசாப்தங்களுக்குள் தவறிப்போன வாழ்வின் பசுமையான தருணங்களை சீர்படுத்தல்களோடு நீட்டிச் செல்ல முடியாததற்கான காரணங்களை ஆராயாத கதைகள் ஏக்கங்களை மட்டுமே வெளித்தள்ளுகின்றன.

பெரும்பாலும் இதில் இடம்பெறுகின்ற கதை மாந்தர்கள் கடலோரத்தை அண்டியவர்களாகவும் மீனவ சமூகமாகவும் இருக்கிறார்கள். எளிய வாழ்க்கை முறையைக் கொண்ட இந்த மனிதர்களை கடந்த கால போர்ச்சூழல் எப்படியெல்லாம் சீரழிக்கிறதென்பது வெவ்வேறு கோணங்களின் பல்வேறு தர்க்கங்களின் வழியே ஒவ்வொரு கதைகளிலும் எடுத்தாளப்படுகிறது.

கடந்த கால தமிழ் அரசியலை வடிவமைத்த இலட்சியகரமான போர் நியாயங்கள் அனைத்தும் எளிய மக்களின் இயல்பான பார்வைகளுக்கூடாக நீர்த்துப்போகும் செயல்களை இந்தப் பிரதியில் உள்ள கதைத்திட்டங்கள் மேற்கொள்கின்றன.

நலிவடைந்த கிராமிய மாந்தர்களை போராளிக் குழுக்கள் கையாண்ட விதம் பிரதியில் பல இடங்களில் விசனமாகவும் முன்வைக்கப்படுகிறது.
நேரான கதை சொல்லும் உத்தி இந்தப் பிரதி முழுவதும் பரவிக் கிடந்த போதிலும் விமர்சனப்பாங்கான சாதாரண சம்பவ எடுத்துரைப்புகள் நாம் கடந்த காலங்களில் கேட்க நேர்ந்த தகவல்களின் வழியாக கதையின் அர்த்தங்களைச் செறிவடையச் செய்கிறது.
உதாரணத்திற்கு:-
தமது நிலைப்பாடுகளோடு உடன்பட மறுத்த சிறிய கிராமம் ஒன்றின் மக்கள் கூட்டத்தை புலிகள் பழி வாங்கிய விதம் பற்றி ஒரு கதையில் வருகிறது.
இது புலிகள் பற்றிய புனித அபிப்பிராயங்கள் மீது நலிவடைந்த மக்கள் காறி உமிழ்வதற்கான வெறுப்புணர்வுகளை உருவாக்கவல்லதாகவே இருக்கிறது.
இன விடுதலை என்ற பெயரில் இடம்பெற்ற போராட்டங்கள் ஆரம்ப காலத்தில் எவ்வாறெல்லாம் உள்ளூர் மட்டத்தில் சில்லறைப் பழிவாங்கலுக்குத் துணை போனதென்ற அர்த்தப் பரிவர்த்தனைகளை வாசிப்பு உருவாக்கி விடுகிறது.

எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இந்தக் கதைகள் தனது உறவுகள், தனது குடும்பங்கள், தனது பிரிவு மக்கள், தனது பிரதேசம் என்ற வரையறைகளோடு சம்பவங்களை அணுகினாலும் இது பேசுகின்ற உரையாடல்களின் மறுபக்கம் அல்லது ஒரு writerly எனப்படுகின்ற எழுத்துணர்வூக்கமாக ஆசிரியனுக்கு மாற்றான கோணத்தில் நோக்கும் போது பல அதிசய சம்பவங்களை பிரதியின்பமாக்குகிறது.
உதாரணத்திற்கு:-
ஏழாற்றுக் கன்னிகள் என்ற கதையில் தந்தையும் மகனும் கடலில் மீன் பிடிக்கும்போது பெரிய சுறா மாட்டிக் கொள்ள மகன் சந்தோசப்படுகிறான். ஆனால் அந்த மீனைப் பார்த்த தந்தை மகனைப் பார்த்து அது சாக முன்னம் கடல்ல விடு என்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம் அது குட்டித்தாச்சி மீன். ஆறேழு குட்டிகள் இருக்கும் என்கிறார்.
இதன் மூலம் ஒரு சமூகத்தின் உயிர்கள் மீதான கரிசனை ஆழமாக உணர்த்தப்படுகிறது.

1990 ல் அழிஞ்சிப்பொத்தானையில் புலிகள் முஸ்லிம்கள் மீது இனச்சுத்திகரிப்பு அட்டூளியம் நடத்தும்போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து கருவில் இருந்த சிசுவையும் கொன்றனர். அந்தக் கொடூரம் புரிந்தவர்கள் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக இருக்க முடியாதென இந்தப் புனைவின் second order meaning உணர்த்துகிறது.
அப்பு என்ற கதையில் ஒரு வரியாகக் கடந்து போகும் சரித்திரம் இப்பிரதியின் அரசியல் நிலைப்பாட்டை பிரகடனப்படுத்துவதாகவே இருக்கிறது.

அதில் தகப்பன் இப்படிக் கேட்பார் - தாயாப் புள்ளயா, ஒண்டடி மண்டடியா எங்களோட இருந்த சோனகச் சனத்த ஏன் கலைச்சனீங்கள்?
இந்தக் கேள்வி தொண்ணூறுகளிலிருந்து தீவிரமடைந்த புலிகளின் முஸ்லிம் இன விரோத அட்டூளியங்களை மட்டும் விமர்சனம் செய்யவில்லை. மாறாக இன்றும் கூட வாக்கு அரசியல் பிழைப்புக்காக முஸ்லிம் மக்களின் அபிலாசைகளுக்கு மதச் சாயம் பூச முற்படும் விக்னேஸ்வரன் போன்றவர்களின் வாதங்களுக்கு முன்பு சோனகர்கள் என்ற பதம் மூலம் அவர்களை வேறு இனமாகச் சுட்டுகிறது இந்தப் பிரதி.

வன்னிப் போரின் இறுதி நாட்களை இயலாமையின் கையறு நிலையோடு நோக்கும் கதையான "தொள்ளாயிரம் சரிகளும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான காயங்களும் " என்ற கதையில் 1995 ற்குப் பிறகு யாழ்ப்பாண வெளியேற்றம் மூலம் வன்னிக் காட்டுக்கு மேய்த்து வரப்பட்ட தமிழ் மக்கள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தப்படும் அவலங்களை பூடக மொழிப் பிரயோகங்களால் சுமக்க முடியாது புனைவின் ஆற்றல் ஸ்தம்பித்துப் போகிறது.
அந்த காலங்களில் பல்வேறு சிங்கள தொலைக்காட்சி விவாதங்களிலும் ஆனந்த சங்கரி, டக்ளஸ் தேவானந்தா, சம்பிக்க ரணவக்க, விஜித ஹேரத் போன்ற பல்வேறு அரசியல் தலைவர்களும் புலிகள் தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதை விபரமாக விமர்சித்திருக்கின்றனர். ஆனால் துரோகிகள், அடக்குமுறையாளர்கள் போன்ற சொற்களுக்கு புலிகள் வழங்கிய அர்த்தங்கள் மூலம் மட்டுமே சிந்தித்தவர்களுக்கு அது புரிந்திருக்கவில்லை.
வன்னியில் மனித அவலங்கள் வகைதொகையின்றி இடம்பெறுவதற்கு முன்னர் இலங்கை அரசு வான் வழி துண்டுப் பிரசுரங்கள் மூலம் மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்திய போதும் புலிகள் அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஆனால் போர்க்களத்தில் மக்கள் படும் இன்னல்களைப் படமெடுத்து ஒளிபரப்ப சேனல் 4 போன்ற அலைவரிசைகளும் பல்வேறு இணையதளங்களும் முண்டியடித்தன.

இங்குதான் போராட்டம் என்பது மக்கள் விடுதலை என்ற அம்சத்திலிருந்து விடுபட்டு உலக கார்ப்பரேட் தளத்திற்கு இடம்மாற்றப்பட்டிருந்ததை நாம் புரிந்து கொள்ள வேண்டியேற்பட்டது என்ற விவாதங்களை உருவாக்கும் சூழலை இந்தப் பிரதி நிர்மாணம் செய்கிறது.
இது போல இன்னும் ஏராளமான அர்த்தங்கள் இந்தப் புனைவு கொண்டிருக்கும் உரையாடல்களுக்குள் மீட்டெடுக்கப்பட வேண்டிய சங்கதிகளாக மறைந்துள்ளன.

இந்தத் தொகுதியில் அதிகமாக என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு விடயத்தை குறிப்பிட்டேயாக வேண்டும். இதில் உள்ள எல்லாக் கதைகளிலும் முபாரக் அலி நாநா என்பவர் தொடர்ச்சியாக இருக்கிறார்.

இலங்கையில் தமிழ் சமூகத்தில் இருந்து எழுதப்பட்ட எந்தக் கதைகளிலோ அல்லது நாவல்களிலோ ஒரு முஸ்லிம் பாத்திரம் கூடஇடம்பெற்றிருக்கவில்லை. அப்படி இருந்தால் கூட அது ஒரு துரோகியாகவோ அல்லது உளவாளியாகவோ அல்லது விரோதத்துக்குரியவராகவோ முன்னிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கு முபாரக் அலி நாநா என்பவர் தமிழர்கள் மீது இரக்கம் கொண்டவராக, தமிழர்களால் நேசிக்கப்படுபவராக, தமிழர்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்பவராக, ஆபத்து வேளைகளில் உதவுகிறவராக, பிணக்குகள் வருகின்றபோது தீர்த்து வைப்பவராக முதன்மைப்படுத்தப்படுகிறார்.
அதனால் இந்தப் பிரதி கடந்த காலத்தில் இரு சமூகங்களுக்குள் நிலவிய சகவாழ்வையும் சமூக அந்யோன்யத்தையும் நிலை நிறுத்த முனைகிறதென எடுத்துக் கொள்ள முடியும். அதேவேளை இன்று சமூகப் பிளவுகளூடாக நிலைபெற்று விட்ட இனத்துவ அரசியலை நீர்த்துப்போக முற்படுகிறதெனவும் கூற முடியும்.

முடிவாகக் கூறுவதானால் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் உயிர்களை எதுவித உறுத்தலுமின்றி பலி கொடுத்த தமிழ் இலட்சியவாத வெறி மனநிலையில் நின்று இந்தப் பிரதியை நோக்கினால் மக்கள் விரோத இழிநிலைப் பிரதி என்று தப்பித்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக