திங்கள், 7 ஆகஸ்ட், 2017

கடல்களால் சூழப்பட்ட கதைகள் -சாஜீத் அம்சஜீத்-

தினகரன் 01.10.2016

இக்கால கட்டத்தின் சிறுகதைகள் இலக்கிய உலகினுள் அதிக கவனத்தினைத் தன்வசமாக்கி வைத்திருப்பதினை நாம் அவதானிக்கலாம். நாவல்கள் எனும் பெரும் பரப்பினைத் தாண்டியும், கவிதைகளின் தாக்கத்தினை மீறியும் சிறுகதைகள் நன்கு வாசிக்கப் படுகின்றன. கதை சொல்லல் பரப்பினை இலகு வடிவத்தில் தருவதற்கு முயற்சிக்கின்ற சிறுகதைகள் எல்லாக் காலகட்டத்திலும் அதிகப்படியான வர்ணனைகளைத் தவிர்த்தப்டியே வெளிவந்திருக்கின்றன.


ஒரு நிலப்பரப்பினை, அதன் வாழ்வியலை சொல்கின்ற சிறுகதைகள் மரபுரீதியான ஒரு பண்பாட்டு அழகியலை தனக்கான அடையாளமாகப் பிரகடனப் படுத்திக் மொள்ளும். சிறுகதைகளின் ஆசிரியனைத் தவிர்த்துவிட்டு ஒருபோதும் அக்கதைகளின் வாசத்தினை நுகர முடியாது என நினைக்கிறேன். இவ் நினைவுக்குப் பலத்த காரணங்கள் உண்டு. ஒரு படைப்பு வெளிவருகின்ற சூழல், அங்கு வசிக்கின்ற மனிதர்கள், அவர்களின்  நுகர்வுக் கலாச்சாரம் என்பன ஒரு கதையினை எழுதுகின்ற ஆசிரியனின் வாழ்வின் பகுதிகளோடு இடைவெளியற்றதாக இருக்கும் என்பதே எனது நம்பிக்கை. அதிலும் நிலங்கள் பற்றிய பகுதிகளைக் கொண்ட சிறுகதைகள் மிக முக்கியமானவை.

அவை கூறுகின்ற வரலாற்றின் வடுக்கள் பற்றிய நினைவுகளையும், அந்நிலங்களில் வாழும் மனிதர்களின் உணர்வுகள் பற்றிய கதைகளும் சிறுகதைகளின் உயிர்த்தன்மையான வாசிப்பிற்கு பெரும் வழியினை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். சிறுகதைகள் கொண்டிருக்கின்ற மாய நுட்பங்கள் பற்றி ஒரு சிறுகதை வாசிப்பாளனால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். சிறுகதைகளின் ஆசிரியன் என்பவன் தான் கதை சொல்லிய அப்படைப்பில் வாசகர்களுக்கு விட்டுச்சென்ற நுட்பங்கள் பற்றிய எந்தக் குறிப்பினையும் எழுதுவதில்லை. அப்படைப்புகளில் இருக்கின்ற நுட்பங்களை வாசகர்களே கண்டு பிடிக்கிறார்கள்....

நுட்பமான சிறுகதைகளின் தொடர்ச்சியாய் உயிர்மெய் பதிப்பகத்தினால் வெளிவந்திருக்கிற தமயந்தியின் "ஏழு கடல்கன்னிகள்" சிறுகதைத் தொகுப்பு. யுத்தத்தின் காயங்கள் விட்டுச்சென்ற மீனவ வாழ்க்கையின் துன்பவியல்கள் கதைகளை மிக நுட்பமாகத் தொகுத்திருக்கிறார் தமயந்தி. ஒரு சமூகம் எவ்வகையான உணர்வுகளோடு ஒன்றித்து வாழ்ந்தது, பிற சமூகத்தினை எவ்வாறு அரவணைத்துக் கொண்டது, அவர்களின் பொருளாதார நிலைகள் அவர்களின் இருதயத்தோடு எப்படி உறவு கொண்டன என்பதினை நுண்ணிய கவனிப்போடு பேசியிருக்கின்றன தமயந்தியின் கதைகள். கிற்ரார் பாடகன், ஏழாற்றுக்கன்னிகள், நாச்சிக்குடா, அப்பு, தொள்ளாயிரம் சரிகளும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான காயங்களும், மண்டா, எட்டாம் பிரசங்கம் என ஏழு கதைகளை உள்ளடக்கி, ஒவ்வொரு கதைக்குள்ளும் மற்றைய கதைகள் புகுந்து, கதை மாந்தர்கள் எல்லாக் கதைகளிலும் ஊடறுத்து ஒரு விசித்திரமான வாசிப்பனுபவத்தினைத் தந்த பிரதிகளுள் "ஏழு கடல்கன்னிகள்" கவனயீர்ப்புக்குரியதாகும்.

"மடிநிறைய ஏமாற்றங்களை மட்டுமே சுமந்தவராக மீண்டும் நாச்சிக்குடா வந்தார் முபாரக் அலி நானா. தனியனாகவே வந்தார். அவரது நாச்சிக்குடா மண்ணில் ஒருபிடி நிலம்கூட அவருக்கானதாக இருக்கவில்லை.  அழுது கண்ணீர் சிந்தவும் திராணியற்ற அவரது கண்கள் குடாக் கடலையே வெறித்துப்பார்த்துப் பரிதவித்தன" நிலத்தினை இழந்த மனிதர்களின் உணர்வுகளுடைய சப்தங்கள் கடலின் இரைச்சலினைவிட மிக அதிகமாய் இருப்பதுபோல் உணர வைத்த தமயந்தியின் கதைகள் காலத்தின்மீது ஏற்றி வாசிக்கப்பட வேண்டியவை.

இரண்டு இனங்களின் ஒத்துழைப்பான வாழ்விற்கு அவர்களது பொருளாதார விட்டுக்கொடுப்புகள் எவ்வகையில் உதவியிருக்கின்றன என்பதினையும், நியாயமில்லாத படுகொலைகள் எவ்வாறு பொருளாதார உறவுகளை தூரப்படுத்தியிருக்கின்றன என்பதினையும் ஏழு கதைகளுடன் இணைத்து ஒரு புதிய வாசிப்பினை சிறுகதை நுட்பத்திற்குள் புகுத்தியிருக்கிறார் தமயந்தி. பழகிப்போன சமாச்சாரங்கள் கொண்ட கதைகளை விட்டு விலகி, நிலத்தின் அழகியலினையும், அவ் நிலங்களில் வாழ்ந்த மனிதர்களின் உணர்வுகளையும், கடல் மீதான மாற்றுப் புரிதலினையும் கதையாடிய தமயந்தியின் "ஏழு கடல்கன்னிகள்" ஒரு வரலாற்றுப் படைப்பனுபவமாகும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக